நாமக்கல் மாவட்டத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்களை காவல்துறையினர் பல மணிநேரமாக தேடி வரும் நிலையில், அவர்களது நிலைமை என்ன..?
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகநாதன் உள்ளார். அவரிடம் இருந்து அந்த பதவியை பறிக்கும் நடவடிக்கையில் திமுக கவுன்சிலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக, ஒன்றிய தலைவர் ஜெகநாதனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானத்துக்கு இரண்டு கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது, குமாரபாளையம் அருகே வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல், காரில் இருந்த அதிமுக பெண் கவுன்சிலர்கள் சங்கீதா, பூங்கொடி ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
இதுகுறித்து, ஜெகநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அளித்த புகாரின்பேரில் குமாரபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஒன்றிய தலைவர் ஜெகநாதனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில், அதிமுக பெண் கவுன்சிலர்களை திமுகவினர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
காரில் கடத்தப்பட்டு 10 மணிநேரத்துக்கு மேலாகியும் அதிமுக பெண் கவுன்சிலர்கள் எங்கே உள்ளனர்? அவர்களது நிலைமை என்ன? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத சேலம் மாவட்ட ஆட்சியர் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி, சுந்தர் ராஜன், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.