அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார்.கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தெலுங்கானாவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி.அன்பழகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கே.சி வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கே.பி. அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6வதாக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்திருப்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.