டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெற வாய்ப்பில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தமிழகம்,கேரளா அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்க அரசின் ஊர்திகள் இடம்பெறாது என்றும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மறுபரீசிலனை செய்ய வாய்ப்பில்லை எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்க ஊர்திகள் இடம்பெறாதது குறித்த காரணங்களைத் தெரிவித்துவிட்டோம் என்றும், கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட 25,000 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு 5,000 முதல் 8,000-ஆக அது குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு, ராஜ்நாத் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்தில்,“ குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்க தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்வடிவு முதல் மூன்று சுற்றுகள் வரை பரிசீலனையில் இருந்தது. மூன்ரு சுற்றுகள் முடிவில் இறுதிசெய்யப்பட்ட 12 அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறவில்லை. இதற்கு முன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த 2017, 2019, 2020, 2021-ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் பங்குபெற்றன. வல்லுநர் குழு மூலமே குடியரசு நாள் அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தி தேர்வு நடைபெறுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது