அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாண்பை குறைக்கும் வகையில் காட்சிகள் வைத்திருப்பதை பற்றி மத்திய இணை அமைச்சர் முருகன் தன்னிடம் கேட்டறிந்ததாகவும் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழகத்தின் பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் காமெடி ஷோ ஒன்று ஒளிபரப்பானது. அதில் பங்கேற்ற குழந்தைகள் மன்னர் கால கதையினை வைத்து காமெடி செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் கருப்பு பணம் ஒழிப்பு, பணமதிப்பிழப்பு, பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவை குறித்து மறைமுகமாக ஏராளமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளை தான் பெயரைக் குறிப்பிடாமல் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்ததாகவும், இது கண்டனத்திற்குரிய என ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவினர் கடும் வாதங்களை முன்வைத்து வந்தனர். ஒருபுறம் கடும் எதிர்ப்பு ஒருபுறம் ஆதரவினை கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் மாண்பை குறைக்கும் வகை இருந்ததாக புகார் எழுந்தது.குழந்தைகள் இப்படி விமர்சனங்களை முன் வைக்க வாய்ப்பில்லை எனவும், இது பாஜக எதிர்ப்பு மனநிலை, குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக அந்த சேனல் வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் ஒருபுறமும், அதே நேரத்தில் காமெடி நிகழ்ச்சியை காமெடியாகத்தான் பார்க்க வேண்டும் எனவும், குழந்தைகளின் பேச்சுகளுக்கெல்லாம் உள் அர்த்தம் கற்பிக்கக் கூடாது என அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் இருந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி குறித்து மத்திய இணை அமைச்சர் திரு முருகன் அவர்கள் தன்னிடம் தொடர்புகொண்டு பிரதமர் குறித்து காட்சிகள் வைத்திருப்பதை பற்றி கேட்டறிந்தார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.