அமைச்சர் துரைமுருகனுக்கு காங்கிரஸ் பதில்: ‘காமராஜர் பற்றி வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்’
காரில் சைரனை நிறுத்திய விவகாரத்தில், வரலாறு தெரியாமல் துரைமுருகன் பேச வேண்டாம் என சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்
காமராஜர் – பக்தவத்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி’, என்று துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கு, வரலாறு தெரியாமல் துரைமுருகன் பேச வேண்டாம் என சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் பொங்கல் விழா நேற்று நடந்தது. மகளிர் அணி நிர்வாகிகள் பொங்கல் வைத்து கொண்டினர். மாவட்டத் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில், கட்சியினருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரில், காமராஜரை பற்றி, அமைச்சர் துரைமுருகன் பேசியது தொடர்பான கேள்விக்கு, செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். செல்வப்பெருந்தகை கூறுகையில், துரைமுருகன் வயதில் முதிர்ந்தவர், அனுபவமிக்கவர். அவைமுன்னவர், அவர், காமராஜர் பற்றி கூறியது வருத்தம் அளிக்கிறது. காமராஜர் போன்ற எளிமையான முதல்வரை உலகமே பார்த்ததில்லை. காமராஜரை பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும்.
காமராஜர் முதல்வராக இருந்தப்போதே, ’நான் என்ன வெளிநாட்டிலா இருக்கிறேன்… எனக்கு எதற்கு இந்தப் பாதுகாப்பு . வாகனத்தில் செல்லும் போது எனக்கு எதுக்கு சைரன் ஒலி எழுப்ப வேண்டும்?’ எனக் கூறி ’சைரன்’ ஒலிப்பானை நிறுத்தியவர் காமராஜர். ஆனால், ’காமராஜர், பக்தவச்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி’ என, துரைமுருகன் தவறாக கூறியிருக்கிறார். துரைமுருகன் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். காமராஜரை காங்கிரஸ் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களும் நேசிக்கின்றனர். அதனால், துரைமுருகன் மீண்டும் அவர் தன்னை சுய பரிசோதனை செய்து தான் பேசியதை திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இந்திராகாந்தி, காமராஜரை பற்றி பேச வேண்டாம் என்று வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.