சென்னை: துணைவேந்தர் நியமனங்களில் கவர்னர்களின் அதிகாரங்களை பறித்து பல்கலைகளை கட்சி குடும்பச் சொத்தாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார்.அதேபோல, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியும், “பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளதுமேற்குவங்க மாநிலத்தில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதலை அடுத்து, துணைவேந்தரை மாநில அரசே நியமித்தது கவனிக்கத்தக்கது. கேரளாவிலும் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. எனவே துணைவேந்தர்கள் நியமனத்தை மாநில அரசு செய்வது தான் சிறப்பாக இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார். தமிழக அரசின் இந்த முடிவுக்குதான் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: ‘உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் இந்த அறிவிப்புகளை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், அந்த அறிவிப்பு கோடான கோடி உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய, கிராமப்புற தமிழக மாணவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது.துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர்கள் மூலமாக நடைபெற்று வந்தாலும் நடைமுறையில் மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்களுடைய விருப்பமே அதில் இறுதி வடிவம் பெறுகிறது. துணைவேந்தர்களை நியமிக்க மூன்று பேர் கொண்ட தேர்வுக் கமிட்டியை நியமிக்கும் பொறுப்பைக் கூட ஆளுநர்கள் சுயமாக நியமிக்க முடியாமல் மாநில அரசுகள் கொடுக்கும் பெயர்களை மட்டுமே ஆளுநர்கள் பரிந்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சூழல்களும் உண்டு.தமிழகத்தில் 50 வருடங்களாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்கள் சாதி, மத, ஊழல், சொந்த பந்த சகதிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்போரின் உறவினர்கள் அல்லது ஜாதி மத அபிமானங்களுக்கு மட்டுமே துணைவேந்தர்கள் பதவி இருந்தது. ஆராய்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் அளிக்கும் சாதாரண நிறுவனமாகவே குறுகி விட்டன. பல பேராசிரியர்களே பாலியல் புகார்களுக்கு ஆளாகினர்.துணைவேந்தர்களில் பலர் வருமானத்துக்கு அதிகமாக பன்மடங்கு சொத்து சேர்த்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி இழந்தனர். துணைவேந்தர் நியமனங்கள் கவர்னர் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சிறு பங்கு கூட மாநில அரசுக்கு இருக்கக்கூடாது. துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை தி.மு.க. அரசு தன் வசப்படுத்தினால் கிராமப்புற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். சட்டப்படியும், நியாயப்படியும் துணைவேந்தர் நியமனங்கள் ஆளுநரின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும்.பெரும் பங்கு என்ன? ஒரு சிறு பங்கு கூட மாநில அரசுக்கு இருக்கக்கூடாது என்பதே நம்மைப் போன்ற பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாகும். ஆளுநர்களை அகற்றிவிட்டு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை திமுக அரசே தன் வசப்படுத்திக் கொண்டு ஸ்டாலின் அவர்களின் சொந்த பந்தங்களையும், உற்றார் உறவினர்களையும், தனது கட்சிக் காரர்களையும், சொம்பு தூக்குபவர்களையும் துணைவேந்தர்களாக தாங்களாகவே நியமனம் செய்து கொண்டால் கோடான கோடி தமிழக ஏழை, எளிய, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.மாநில சுயாட்சி என்ற பெயரில் துணைவேந்தர் நியமனங்களில் கவர்னர்களின் அதிகாரங்களை பறித்து பல்கலைகளை கட்சி குடும்பச் சொத்தாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். அது தி.மு.க. அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணிக்கான துவக்கமாக அமையலாம். தவறான பாதையை தேர்ந்தெடுக்காதீர்’ என்று தெரிவித்துள்ளார்.