நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்… பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்… ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை… அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது” என்று மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பஞ்சாப் மாநில முதல்வர் சன்னி விளக்கம் தந்துள்ளார்… அத்துடன் பிரதமரை வரவேற்க, தான் எதற்காக நேரில் செல்லவில்லை என்றும் காரணம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.எனவே, இதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது…ஆனால், பிரதமர் மோடியின் வாகனம், ஹுசைனிவாலாவை சென்றடைய 30 கிமீ தூரம் இருந்தபோது, வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டன. பதிண்டா என்ற பகுதியின் மேம்பாலத்தில் பிரதமரின் காண்பாய் சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி வந்தது..
பிறகு, பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் பஞ்சாப் அரசையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இதுகுறித்து உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையே வெளியிட்டுவிட்டது.. அதில், ‘மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார்… பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது. பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின்படி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்க வேண்டும்.அவசர கால திட்டத்தை கணக்கில் கொண்டாடுவது, பஞ்சாப் அரசு சாலை வழியாக செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்… ஆனால், அப்படி செய்யப்படவில்லை.. இந்த கடுமையான பாதுகாப்பு விதிமீறலை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கை தேவை.. இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பஞ்சாப் மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் தந்துள்ளார். ‘தங்கள் மீது எந்த தவறும் இல்லை, இது பாஜகவின் திட்டமிடப்பட்ட செயல், பாதுகாப்பு குறைபாடுகளும் எதுவும் இல்லை, பிரதமர் மோடி விமானம் மூலம் வர திட்டமிட்டிருந்தார்.. ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார்.. நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்… பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்…ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை… அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது…. முதலில் நான் நான் பிரதமரை சந்திக்க திட்டமிட்டிருந்தேன்… ஆனால், என்னுடைய செயலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.. மேலும் சிலருக்கும் கொரோனா உறுதியானதால், நான் தனிமைப்படுத்தி கொண்டிருந்தேன்.. அதனால்தான், பிரதமரை வரவேற்க என்னால் நேரில் செல்ல முடியாமல் போயிற்று..பிரதமரின் பாதுகாப்புக்கு பஞ்சாப்பில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் சென்றது எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது. ஆனால், பாஜவினர் தான் இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார்கள்.. பிற்பகல் 3 மணிக்குள் சாலைகளில் இருந்து செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தேன்…பிரதமரின் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆனால் 700 பேர்தான் நிகழ்சிக்கு வந்திருக்கிறார்கள், இதன் காரணமாகவே அவர்கள் மழையை காரணம் சொல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர் என்றும் மேலும் முதல்வர் சன்னி விளக்கம் தந்தார். இதனிடையே, பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டில் பெரோஸ்பூர் மூத்த போலீஸ் அதிகாரி ஹர்மன் ஹன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.