தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுநேரத்துக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இது 1,489 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்றுநேரத்துக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால், இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கிறது. அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமைகளில் நடைபெறும்” என்றார்.