- இந்தியாவில், ரூபாய் நோட்டுகள் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், `10 ரூபாய் நாணயம் செல்லாது’ என இந்திய அரசு அறிவித்துவிட்டதாக ஒரு வதந்தி காட்டுத்தீபோலப் பரவியது. இன்றளவும் அந்த வதந்தியை நம்பும் பகுதிகளும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல சமீபத்தில், 500 ரூபாய் நோட்டைப் பற்றிய வதந்தி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.அந்த வீடியோவில், “500 ரூபாய் நோட்டிலிருக்கும் பச்சைக்கோடுகள், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துக்குப் பக்கத்தில் இல்லாமல், மகாத்மா காந்தி படத்தின் பக்கத்திலிருந்தால், அது போலி நோட்டு. அப்படியான நோட்டுகளை யாரும் வாங்க வேண்டாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 500 ரூபாய் நோட்டு குறித்த இந்த வதந்தி காரணமாக, வட இந்தியாவின் சில பகுதிகளில் வியாபாரிகள் பலரும், இந்த மாதிரியான நோட்டுகளை வாங்க மறுப்பதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன.இந்த நிலையில், இந்த வதந்தியின் உண்மைத்தன்மை பற்றி விளக்கமளித்திருக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் Press Information Bureau (PIB). `PIB FACT CHECK’ என்கிற அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில், “ஒரு வீடியோவில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துக்குப் பக்கத்தில் பச்சைக்கோடுகள் வராமல், மகாத்மா காந்தி புகைப்படத்துக்குப் பக்கத்தில் வந்திருந்தால், அந்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிப்படி, இரண்டு வகையான ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்” என்று சொல்லிப் பரவிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது PIB.