Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

3 அரசு பஸ்கள் ஜப்தி திருச்சி மாவட்ட கோர்ட் அதிரடி

0

திருச்சி, பிப்.13:

பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த இருவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க தவறியதால் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 3 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தினர்.

திருச்சி அரிமங்கலம் காமராஜ்நகர் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர்கள் சாகுல்அமீது (39), சபீரான் (35). இருவரும் கடந்த 5.8.2018 அன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவிநகர் பகுதியில் இருக்கும் சர்வீஸ் சாலையில் பழைய ‘வே பிரிட்ஜ்’ அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் சாகுல்அமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சபீரான் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். இதுகுறித்த வழக்கு திருச்சி சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் கடந்த 16.6.2022 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் விபத்தில் பலியான சாகுல்அமீதுக்கு ₹34 லட்சத்து 2 ஆயிரத்து 300ம், சபீரானுக்கு ₹20 லட்சமும் இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என அப்போதைய சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை கோர்ட் மாவட்ட நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார். கோர்ட் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவுக்குள் இழப்பீடு தொகை வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டவர் சார்பில் அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தற்போதைய நீதிபதி நந்தினி அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 3 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 பஸ்களை நேற்று ஜப்தி செய்த கோர்ட் ஊழியர்கள், அவற்றை திருச்சி கோர்ட் வளாகத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தினர்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்