அமமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி அதிமுகவில் இணைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் திடீரென பாஜகவில் இணைந்த சம்பவம் அவரது ஆதரவாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு அமமுக தயாராகி வருகிறது. தனித்துப்போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே, டிடிவி.தினகரனின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறி , திமுகவில் இணைந்துவிட்டர்.
இந்நிலையில், அமமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி அமமுகவில் இருந்து விலகி கடந்த ஜனவரி 29-ம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நீலாங்கரை எம்.சி. முனுசாமி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இணைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் பாஜகவில் இணைந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.