Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

130 கி.மீ. வேகத்தில் பறக்கும் ரெயில்கள் தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு

0

திருச்சி பிப் 12

தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரெயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெயில் பாதை மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில் விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. அந்தவகையில் சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணி குண்டா வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ வரை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையில், மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு ரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024-25-ம் ஆண்டு நிதியாண்டுக்கு 10 சதவீதம் கூடுதல் நிதி கிடைத்துள்ளது. இதனால், பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, ரயில் தண்டவாளம் புதுப்பித்தல், மேம்படுத்தல், நவீனப்படுத்தல் மற்றும் சிக்னல் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலமாக, அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். வரும் மார்ச் மாதத்துக்குள் ஜோலார்பேட்டை- சேலம்-கோயம்புத்தூர் (286 கி.மீ. தொலைவு) மார்க்கத்தில் ரயில் வேகத்தை 130 கிலோமீட்டராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 2025-26-ம் நிதியாண்டில், சென்னை எழும்பூர்-விழுப்புரம்-திருச்சி (336.04 கி.மீ.) மார்க்கத்தில் மணிக்கு 130 கி.மீ.க்கு ரயில்வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி-திண்டுக்கல்-மதுரை-திருநெல்வேலி (311.11 கி.மீ.) மற்றும் நாகர்கோவில்-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் 2026-27-ம் நிதியாண்டில் மணிக்கு 130 கி.மீ. வரை ரயில் வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பாலங்களை வலுப்படுத்தல், பாதை வளைவுகளை எளிதாக்குதல், தண்டவாளத்தைக் கடந்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைத்தல், சிக்னல்களை மேம்படுத்தல், உயர்மட்ட மின்பாதை மேம்படுத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றை நிறைவேற்றுவது மூலமாக, ரயிலின் வேகம் அதிகரித்து பயண நேரம் கணிசமாக குறையும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்