Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது…..

0

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தெற்கு மாவட்ட தலைவராக அதிரை ராஜிக் என்பவர் தலைமை வகித்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பேச்சாளரான ஜமால் முகமது உஸ்மான் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி தூக்கிலிட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. உணர்ச்சிவசப்படும் சமூகம் எனவும், நீதிபதிகளுக்கு விபத்து போன்றவை ஏதாவது ஏற்பட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் காரணம் என பேசியதாகவும், அவரது பேச்சு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலரான கௌரிசங்கர் அதிராம் பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற ஜமால் முகமது உஸ்மானை நேற்று இரவு வல்லம் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஜமால் முகமது உஸ்மான் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்