திமுக ஆட்சி அமைந்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி கொண்டே இருந்தது.கடந்த மாதம் உதயநிதி அமைச்சராக்க வேண்டும் என கட்சிக்குள் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அதனை தொடங்கிவைத்தது உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சா.மு. நாசர் உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி என பல்வேறு கட்சி பிரமுகர்கள் உதயநிதியை அமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராக்கவோ வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அமைச்சராகும் எண்ணமே தனக்கு இல்லை என உதயநிதியே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.கோவையில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், “அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதிலும் துணை முதல்வர் வரை என்னை கொண்டு போய்விட்டார்கள். தினமும் பத்திரிகைகளில் இதுகுறித்துதான் எழுதி வருகிறார்கள். அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை. மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.முதலமைச்சருக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயம்புத்தூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன். எப்படியும் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை.